Wednesday, January 06, 2016

சித்தர் ஜீவ சமாதியும் பிரச்சனை தீர வழிபிறப்பும் !!!


மனிதர்கள் யாவரும் ஏதாவது ஒரு திதியில் நட்சத்திரத்தில் பிறந்திருப்பார்கள். இதை அவரவர் ஜாதகத்தில் அறியலாம். பலருக்கும் தன் பாவ வினையால் எவ்வளவு முயற்சித்தும் தெய்வ அருளை பெறமுடியாமல் இருப்பார்கள். அவர்கள் அவர்கள் தன் திதியிலோ அல்லது நட்சத்திரத்திலோ அல்லது நட்சத்திரத்திலோ பிறந்த சித்தர்களைக் கண்டு வணங்கினால் பிரச்சனை தீர வழிபிறக்கும். ஒரு முறையாவது உங்கள் சித்தர் ஜீவ சமாதி நேரில் சென்று ஜென்ம நட்சத்திரத்திலோ, திதியிலோ சென்று தரிசித்துவிட்டு பின்பு வீட்டிலேயே மறுமுறையில் அந்த குறிப்பிட்ட நாளில் மாதாமாதம் உபவாசம் இருந்து வணங்கிவந்தால் பல மாறுதலான வாழ்வு தங்களுக்கு அமையும்.
வெகு தொலைவில் சில ஜீவ சமாதிகள் அமைந்துள்ளதால் அங்கு சென்றுவர இயலாதவர்கள் வீட்டிலேயே ஒரு வெள்ளை விரிப்பின்மீது அமர்ந்து உங்கள் சித்தரின் பெயரை உச்சரித்து முடிந்தால் அவரின் மந்திரங்களைக்கூறி தியானம் செய்யுங்கள். நல்லதே நடக்கும்.
மேலும் அறிக : திதியில் பிறந்தவர்களே அனைவரும் எனவே திதி இல்லாமல் விதி அமையாது. உங்கள் நட்சத்திர நாளை பார்த்து பூஜிக்க முடியாவிட்டாலும் உங்கள் திதி நாளில் பூஜிக்கலாம். அதுவும் முடியாவிட்டால் அமாவாசை பௌர்ணமி திதிகளில் வழிபாடு செய்யலாம். சில சித்தர்களின் ஜீவ சமாதி எங்குள்ளது என்று தெரியாமலேயே இருக்கிறது. சிலர் அங்குள்ளது இங்குள்ளது எனவும் தன் ஊரை வளர வைக்க எத்தனித்து இங்குதான் சமாதி உள்ளது. ஓலைச்சுவடி ஆதாரம் உள்ளது என ஒரு கதையையும் உருவாக்கிய சம்பவம் நிறைய உள்ளது. எது எப்படியோ நம்பிக்கையே தெய்வம். அந்த நம்பிக்கையோடு இருக்கும் இடத்தை நாடிச்சென்று வழிபாடு செய்யுங்கள்.
சித்தர்கள் எந்த திதியில் பிறந்தார்கள் என்பதை வரலாறு சரியாக அனைவருக்கும் குறிப்பிடவில்லை. ஆனால் நட்சத்திரங்களையும் பிறந்த தமிழ் மாதங்களையும் குறிப்பிட்டுள்ளார்கள். கீழே எந்தெந்த நட்சத்திரத்தில் சித்தர்கள் பிறந்தார்கள் அவர்கள் ஜீவ சமாதி எங்குள்ளது.
அவர்களுக்கான மந்திரம் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது பயன்படுத்தி வளம் காணுங்கள்.
அசுவினி நட்சத்திர சித்தர் பெயர் காளங்கிநாதர் ஆவார். இவர் சமாதி மற்றும் சக்தி அலைகள் கஞ்சமலை மற்றும் திருக்கடையூர் ஆகிய தலங்களில் உள்ளது. அவரவருக்குபெயரே மந்திரம். எனவே சித்தர்களின் பெயரை மரியாதையாக உச்சரித்தலே போதும்.
ஓம் குருவே சரணம் என மூன்றுமுறை கூறி ஓம் ஸ்ரீ காளங்கி நாதர் சித்த குருசுவாமியே சரணம் சரணம் என முடிந்தளவு மனம் விரும்பும் வரை கூறலாம். மற்ற நட்சத்திரக்காரருக்கும் இதே முறையில் தான் மந்திரம் கூற வேண்டும்.
காளங்கிநாதர் என்ற பெயரை நீக்கி உங்கள் சித்தர் பெயரை சேர்த்துக்கொள்ளவும்.
அடுத்து
பரணி நட்சத்திரம் சித்தர் போகர் ஆவார். இவர் பழனி முருகன் சன்னதியில் சமாதி உள்ளது.
அடுத்து
கிருத்திகை நட்சத்திரம் ரோமரிஷி சித்தர்ஆவார். இவருக்கு சமாதியும் இல்லை. இவர் உடல் அழியவும் இல்லை. நேரே கைலாயத்திற்கு சென்றுவிட்டார் என வரலாறு கூறுகிறது. இவரை திங்கள்கிழமை வெள்ளை ஆடை அணிந்து வடக்கு நோக்கி திருக்கயிலை இருப்பதாக பாவித்து வணங்கவும்.
அடுத்து
ரோகிணி நட்சத்திரம் சித்தர் மச்சமுனி ஆவார். இவர் ஜீவ சமாதி திருப்பரங்குன்றத்தில் உள்ளது.
அடுத்து
மிருகசீரிடம் நட்சத்திரம் சித்தர் பாம்பாட்டி சித்தர் ஜீவ சமாதி சங்கரன் கோயில் என்ற ஊரில் உள்ளது. இன்னொருவர் சட்டமுனி சித்தராவார். ஊர் திருவரங்கம் ஆகும். சில நட்சத்திரக்காரர்களுக்கு மட்டும் இரண்டு சித்தர் வருவர்.
அடுத்து
திருவாதிரை நட்சத்திரம் சித்தர் இடைக்காடார் ஜீவ சமாதி திருவண்ணாமலை.
அடுத்து
புனர்பூச நட்சத்திரம் சித்தர் தன்வந்தரி ஆவார். இவர் வைதீஸ்வரன் கோவிலில் ஜீவ சமாதி ஆனவர்.
அடுத்து
பூசம் நட்சத்திரம் கமல முனி சித்தர் ஆவார். இவர் திருவாரூர் என்ற ஊரில் ஜீவ சமாதி உள்ளது.
அடுத்து
ஆயில்யம் நட்சத்திரம் இதற்கான சித்தர் அகத்தியர். இவர் ஒளிவட்டம் குற்றால பொதிகைமலையில் உள்ளது. சமாதி கேரள தலைநகரம் திருவனந்தபுரம் இங்கு உள்ளது.
அடுத்து
மகம் நட்சத்திரம் இந்த நட்சத்திரத்தில் அவதரித்தவர் சிவ வாக்கிய சித்தர் ஆவார். இவர் ஜீவ சமாதி கும்பகோணத்தில் உள்ளது. பெரும்பாலும் சித்தர்கள் ஜீவ சமாதி சிவாலயமாகவே இருக்கும்.
அடுத்து
பூரம் நட்சத்திரம் இவர் சக்தியின் அருளைப் பெற்ற நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரத்தில் அவதரித்த தெய்வ பெண்மணி ஸ்ரீ ஆண்டாள் ஆவார். இவர் பூமாதேவி அம்சமாக உள்ளார். இவரை வணங்க ஏற்ற இடம் ஸ்ரீவில்லிபுத்தூர் மட்டுமே.ஏனெனில் இவர் தோன்றிய இடமே அங்குதான்.
அடுத்து ராமதேவ சித்தரும் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்தான். இவர் மாற்று பெயர் யாகோப்பு என்றும் உள்ளது. இவர் ஜீவசமாதி அரபு நாடான மெக்காவில் உள்ளது. இவர் ஒளி வந்துபோகும் இடம் அழகர் மலையாகும். இவரை வழிபட நம் நாட்டினர் அழகர் மலைக்குத்தான் செல்கிறார்கள்.அடுத்து
உத்திரம் நட்சத்திரம் இதில் அவதரித்த சித்தர் காகபுஜண்டர் ஆவார். இவர் ஜீவசமாதி கோயில் திருச்சி உறையூரில் உள்ளது.
அடுத்து
அஸ்தம் நட்சத்திரம் சித்தர் கருவூரார் ஆவார். இவர் சமாதி கரூரில் உள்ளது. அடுத்து இவர் ஒளிவட்டம் வந்து செல்லும் இடம் தஞ்சாவூர் பெரிய கோயில் ஆகும். அடுத்து
சித்திரை நட்சத்திரம் இதற்கான சித்தர் புண்ணாக்கீசர் ஆவார். நண்ணா சேர் என்ற இடத்தில் இவர் ஜீவ சமாதி உள்ளது.அடுத்து
சுவாதி நட்சத்திரம் இதற்கான சித்தர் புலிப்பாணி ஆவார். சமாதி பழனி அருகில் வைகாவூர் என்ற இடத்தில் உள்ளது.
அடுத்து
விசாகம் நட்சத்திரம் இதற்கான சித்தர் நந்தீசர் மற்றும் குதம்பை சித்தர் ஆவார். நந்தீசர் காசி நகரத்திலும் (பனாரஸ்), குதம்பை சித்தர் மாயவரத்திலும் ஜீவசமாதி உள்ளது.
அடுத்து
அனுஷம் நட்சத்திரம் சித்தர் வால்மீகி அல்லது வான்மீகர் என்று அழைக்கப்படுபவராவார். இவர் எட்டுக்குடியில் ஜீவசமாதி உள்ளது.
அடுத்து
கேட்டை நட்சத்திரம் இதற்கான சித்தர் பகவான் வியாசர் ஆவார். இவர் உடல் அழிவற்றது. எனவே காற்றோடு காற்றாக கலந்து இருப்பார். இவரை நினைத்தாலே போதும். அவ்விடம் வருவார்.
அடுத்து
மூலம் நட்சத்திரம் இதற்கான சித்தர் பதஞ்சலி ஆவார். இவர் சமாதி ராமேஷ்வரத்தில் உள்ளது.
அடுத்து
பூராடம் நட்சத்திரம் இதற்கான சித்தர் பூரம் நட்சத்திரத்திற்கு சொல்லப்பட்ட ராமதேவர் எனும் யாகோப்பு சித்தரே ஆவார். அழகர்மலை மற்றும் மெக்காவில் ஜீவ ஒளி உள்ளது.
அடுத்து
உத்திராடம் நட்சத்திரம் இதற்கான சித்தபிரான் கொங்கணர். இவர் ஜீவசமாதி திருப்பதி ஆகும்.
அடுத்து
திருவோணம் நட்சத்திரம் இதற்கான சித்தர் தட்சிணாமூர்த்தி சுவாமிகள் ஆவார். இவர் சமாதி பாண்டிச்சேரி அடுத்து உள்ள பள்ளித்தென்னல் என்ற இடத்தில் உள்ளது. அடுத்து
அவிட்டம் நட்சத்திரம் இதற்கான சித்தர் திருமூலர் ஆவார். இவர் சிதம்பரத்தில் ஜீவசமாதி உள்ளது.
அடுத்து
சதயம் நட்சத்திரம் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் கௌபாலர் ஆவார். இவரின் சமாதி இங்குதான் என வரலாறு தெளிவாக குறிக்கவில்லை. எனினும் மன ஒழுக்கத்தோடு இவரை நினைத்தாலே தேடிவந்து அருள்புரிவார் எனக் குறிப்பு உள்ளது.
அடுத்து
பூராட்டாதி நட்சத்திரம் இதற்கான சித்தர் சோதிமுனி ஆவார். இவர் ஜோதி வடிவிலே ஜீவனாக உள்ளவர். அதனால் இவருக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் அங்கு அருள்பாலிப்பார். தனித்து சமாதி என்று குறிப்பிடும்படியாக தெரிவிக்கவில்லை.
அடுத்து
உத்திரட்டாதி நட்சத்திரம் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் டமரகர் சித்தர் ஆவார். இவரும் நேரிடையாக காற்றில் ஐக்கியமாகி கலந்துவிட்டதென வரலாறு கூறுகிறது. இவரை சிவாலயத்தில் ஒலிக்கும் இசை வாத்தியங்களில் ஏழாம் ஓசையில் ஒலியாக வந்து இறைவனுக்கு இசை முழக்கத்தால் சேவை செய்வார் எனக் குறிப்பிடுகிறார்கள். இவரை வீட்டிலேயே சிறுமணி ஓசையில் வரவழைத்து அவர் அங்கு வந்ததாக பாவித்து வணங்கலாம்.
அடுத்து
ரேவதி நட்சத்திரம் இதற்கான சித்தர் சுந்தரானந்தர் ஆவார். இவர் ஜீவசமாதி கோயில் மதுரையில் உள்ளது, அறிக.
மனத்தூய்மையும், உடல் தூய்மையும், கர்ம தூய்மையும் (பாவமற்ற கர்மாவைத் தொடர்தல்) தனிஅறையும் கொண்டு, ஒற்றை தீபம் மற்றும் ஏற்றி மன ஒருநிலைப்பாட்டோடு உங்கள் சித்தரை வணங்கி வாருங்கள். நிச்சயம் அவர்கள் அருளை தர தவறமாட்டார்கள். உங்களிடம் உள்ள பாவ கர்மாவிற்கு தயங்கி தெய்வம் துணைக்கு எளிதில் வரமாட்டார்கள். ஆனால் சித்தர்கள் அவ்வாறில்லை. தன்னை அழைத்தவர்களுக்கு எதாவது ஒரு வழியில் வழிகாட்ட தயங்கமாட்டார்கள். எனவே ஒரு தினத்தில் சில நிமிடங்களையாவது சித்தர் வழிபாட்டிற்கு செலவிடுங்கள். சித்தர் பூஜை செய்பவர்கள் நீத்தாருக்கு திதி பார்த்து தெவசம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. குறைந்தது சித்த தியானத்திற்கு அரைமணி நேரமாவது ஒரு நிலையில் அமர வேண்டும். இந்த வழிமுறையை கடைபிடித்து உங்கள் கஷ்டத்தையும், வறுமையையும் போக்கிக்கொள்ளுங்கள்.......